சென்னை,

இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்த அவசர சட்டத்தில், ஆலோசனைப்படி காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்த காளைகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம் மூலமாக காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் அடுத்த 6 மாத காலத்துக்கு அமலில் இருக்கும். ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த இதுவரை இருந்த தடை இந்த அவசரச் சட்டம் மூலம் தகர்ந்துள்ளது. இது நிரந்தரத் தீர்வாக இல்லாமல் இருந்தாலும், தமிழக மக்களின், குறிப்பாக தமிழக இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.

தமிழகத்தின் கலாச்சார விளையாட்டான, ஜல்லிக்கட்டுப் போட்டி, பீட்டா அமைப்பு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ந்தேதி உச்ச நீதிமன்றம் விதித்தது. தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றே தீர வேண்டும் என்று தமிழக இளைஞர்கள் நடத்திய மாபெரும் அகிம்சை புரட்சியின் காரணமாகவே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வசதியாக, காளைகளை தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி சட்டதிருத்தம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.