சென்னை:
தாம்பரம்  படப்பை கவுன்சிலர் மர்ம நபர்களால் சர்ச் வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உள்கட்சி பிரச்சினையால் கொல்லப்பட்டரா  அல்லது தொழில் போட்டி காரணமாக என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம்  அடுத்த படப்பை பெரியார் நகரில் வசித்து வருபவர் தனா என்கிற தனசேகரன் (வயது 31).  படப்பை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும் இருக்கிறார்.  இவரது மனைவி டெல்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தனசேகரன் ஞாயிற்றுக்கிழமைதோறும் சர்ச்சுக்கு செல்வது வழக்கம். தனசேகரனின் மனைவி மற்றும் 2 மகன் களும் முன்கூட்டியே சர்ச்சுக்கு சென்று விட்டனர்.  தனசேகரன் லேட்டாக தனியாக மோட்டார் சைக்கிளில் சர்ச்சுக்கு சென்றார்.
சர்ச் அருகே சென்றபோது ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தனசேகரனை  சுற்றி வளைத்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் அந்த  கொலைக் கும்பலிடம்  தப்பிக்க சர்ச்சுக்குள் ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை  விரட்டிச் சென்ற கும்பல் தனசேகரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
dmk1
தலை, கழுத்து, முதுகில் பலத்த வெட்டு காயம் அடைந்த  தனசேகரன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு தேவாலயத்துக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அலறல் சத்தம் கேட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வெளியே வந்தனர். அப்போது பொது மக்கள் சிலர் கொலை கும்பலை பிடிக்க முயன்றனர்.
உடனே மர்ம கும்பல் அரிவாளை காட்டி மிரட்டினர். யாராவது பிடிக்க முயன்றால் வெட்டி கொன்று விடுவதாக தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கொலை கும்பல் சர்வசாதாரணமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தனசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட தனசேகரன் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் சவுடு மண் குவாரி எடுத்தும் தொழில் செய்தார்.   தொழில் போட்டியில் தனசேகரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
murder_39
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், அவர் வெற்றி பெற்ற 6-வது வார்டில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருந்தார்.  நாளை தனசேகரன் வேட்பு மனுதாக்கல் செய்ய இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் தகராறில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
கொலையாளிகள் அனைவரும் 20 வயதுக்குட்பட்ட வாலிபர்கள் ஆவர். அவர்கள் கூலிப்படையாக இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
தனசேகரன் கொலை செய்யப்பட்ட போது, அவரது மனைவி டெல்சி 2 மகன்களுடன் அருகில் உள்ள மற்றொரு தேவாலயத்தில் வழிபாட்டில் இருந்தார்.
கணவர் கொலை செய்யப்பட்டது அறிந்ததும் அவர் குழந்தைகளுடன் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
பட்டப்பகலில் தி.மு.க. கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் படப்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.