சென்னை:  சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய விவாதத்தின்போது, தாம்பரம் உள்பட சில நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவது உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்கூட்டத் தொடர், கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவையில் இந்த நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி, முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து, ஆகஸ்டு 16ந்தேதி  முதல் 19-ம் தேதி வரை பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, 23ந்தேதி முதன் மானிய கோரிக்கை விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நீர்வளத்துறை தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அத்துறை அமைச்சர் கே.என் நேரு, அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.  இதில் தாம்பரம், கடலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி உள்பட  பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக  உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அமைச்சர் பெரிய கருப்பண் விவாதத்தில் பங்கேற்க உள்ளார்.