மீபத்தில் தி.மு.க. பிரமுகர் ராதாரவி, மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்தும் விதமாக மேடையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தினர், ராதாரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் பலரும் ராதாரவி பேச்சை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.

ராதாரவி

ராதாரவி சாரந்த தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரும்கூட இந்த பேச்சுக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், “தி.மு.க.வைச் சேர்ந்தவரும், எல்லா பிரச்சினை குறித்தும் கருத்துக்களைத் தெரிவிக்கும் சமூக ஆர்வலரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லையே” என்ற கேள்வி சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது.

இதே கேள்வியுடன் patrikai.com இதழுக்காக, கவிஞர் மனுஷ்யபுத்திரனை தொடர்புகொண்டோம்.

அதற்கு அவர், “இது போன்ற பேச்சுக்களுக்கு எதிராக எனது கடுமையான கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். அதே நேரம்,  இன்னொரு விசயத்தையும் கவனக்க வேண்டும்.

நான் சார்ந்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் இப்படி பேசியிக்கிறார். அதை கட்சியின் செயல் தலைவர்ரும், எம்.பியும் வெளிப்படையாக கண்டித்திருக்கிறார்கள். இதன் பிறகும் நான் இது குறித்து பேசுவது பொருத்தமாக இருக்குமா என்று எனக்குள் ஒரு கேள்வி.

தவிர,  பொதுவாக நான் எல்லா விசயங்கள் குறித்தும் எனது கருத்தை வலிமையாக முன்வைப்பது உண்டுதான். ஆனால் இந்த பேச்சைப் பொறுத்தவரை, என்னுடைய உடல் நிலையை வைத்து இதை நான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது வருத்தமாக இருக்கிறது” என்றார்.

அதற்கு நாம், “இதை தனிப்பட்ட விசயமாக பார்க்க முடியுமா? .ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளை.. உடல் ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை இழிவு படுத்தியதாகத்தானே பலரும் விமர்சிக்கிறார்கள்.  தவிர இது கட்சிக்கு அப்பாற்பட்ட பொது விசயம்தானே.. தங்களது கருத்தையும் கூறலாமே” என்றோம்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு மனுஷ்யபுத்திரன், “ஆம்.. அதுவும் சரிதான்” என்றவர், தனது கருத்தைச் சொல்ல ஆரம்பித்தார்:

“இன்று அரசியலில் புதிய களம் உருவாகிவிட்டது.  நன்கு படித்த இளைஞர்கள் நிறைய பேர், அரசியலில் ஆர்வமாக இருக்கிறார்கள். அரசியலை கூர்ந்து கவனிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இளைஞர்கள் மட்டுமல்ல.. ஒட்டுமொத்தமாக மக்கள் அனைவருமே அரசியலை கவனிக்கிறார்கள். இன்று எல்லா விசயங்களுக்கும் சமூக ஊடகங்களில் எதிர்வினையாற்றுகிறார்கள்.

சில காலத்துக்கு முன்புவரை  பேச்சுக்கள் வேறு மாதிரியான சூழலில் இருந்தன. அதாவது மேடையில் ஒருவர் பேசுவார். எதிரே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள்தான் இருப்பார்கள். அந்த ஆடியன்ஸ்களுக்கு கேளிக்கை ஊட்டுவதற்காக,  தனிநபர் தாக்குதலை பேச்சாளர்கள் செய்தார்கள். எல்லா கட்சியிலுமே அப்படி சில பேச்சாளர்கள் இருந்திருக்கிறார்கள். அப்போது ஒரு கூட்டத்தில் பேசுவது ஒரு கூட்டத்தோடு போய்விடும்.

ஆனால் இன்று, ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேசுவதை ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பரவுகிறது. அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. அந்த பேச்சுக்களை சமுதாயமே கவனிக்கிறது.

திரைப்படத்தில் ஒரு காட்சியில் எவரையேனும் இழிவு படுத்தி காட்சி வந்தாலும் உடனே அதற்கான எதிர்வினைகள் பரவலாக எழுகின்றன.

இதற்கு இன்னொரு காரணம், நமது சமூகத்தன் உணர்வு நிலை கூர்மைப்பட்டிருக்கிறது.

மனுஷ்யபுத்திரன்

ஆகவே பொது மேடைகளில் பேசுபவர்கள் – அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும்  சரி – மக்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்களை.. கருத்தியில் ரீதியாக ஏற்பட்டிருக்கும் இந்த வளர்ச்சியை புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மனிதர்களுக்குமான உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது என்பதை உணரவேண்டும்.

ஒரு காலத்தில் தலித்துகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மீது விளிம்பு நிலை மக்கள் மீது சிலர் எதிர்மறையாக பேசி வந்திருக்கிறார்கள்.  அதற்கான எதிர்வினை பெரிய அளவில் இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், இன்று புதிய சிந்தனைகளும், புதிய சமூக உணர்வுகளும் கூர்மைப்பட்டிருக்கும் காலம்,  எல்லா தரப்பினரும் தங்கள் உரிமைகளுக்காக போராடும் காலத்தில் இது போன்ற பேச்சுக்களை எல்லோருமே கவனமாக தவிர்க்கவேண்டும். ம். அவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கலாம் ஊடகவியலாளராக இருக்கலாம்.. எழுத்தாளர்களாக இருக்கலாம்.. .யாராக இருந்தாலும் சரி..இதுபோல பேசக்கூடாது. இதுபோன்ற பேச்சுக்களை ஏற்க முடியாது என்பது மட்டுமல்ல.. அவற்றை கடுமயாக எதிர்க்க வேண்டும்கண்டிக்கப்பட வேண்டும்” என்று நம்மிடம் சொல்லிமுடித்தார் மனுஷ்யபுத்திரன்.