சென்னை: ‘குழந்தைக்காக 10நிமிடங்கள் கூட செலவிட முடியவில்லையே’ எனெ மனஅழுத்ததால் பேசிய காவல்துறை துணைஆய்வாளரின் ஆடியோ வைரலான நிலையில், அந்த உதவி ஆய்வாளர் அருணாச்சலத்தை அழைத்து, டிஜிபி சைலேந்திரபாபு ஆறுதல் கூறினார்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, மாநிலத்தில், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் கடுமையான மனஅழுத்ததுக்கு ஆளாகி உள்ளனர். அதிக நேர பணிச்சுமை காரணமாக காவல்துறையினர் சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், நெல்லையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் என்பவர் தனது பணிச்சுமையை ஆடியோவாக வெளியிட்டிருந்தார். அவரது ஆடியோவில், ”கடந்த மூன்று மாதங்களாக திருநெல்வேலி மாநகரத்தில் நான் மிகுந்த மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறேன். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நான் விடுப்பு இல்லாமல் பணியாற்ற வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனது திருமண நாள் பிறந்த நாள் வரை ஓய்வு எடுக்காமல் வேலை செய்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். கடந்த 10 மாதங்களில் ஒருநாள் கூட தொடர்ந்து 5 மணி நேரம் நான் உறங்கியது இல்லை. எனது அன்பு மகள் உறங்கியபின் வீட்டுக்கு வருவதும் காலையில் விழிக்கும் முன்பாக நான் வேலைக்கு செல்வது வாடிக்கையாகி உள்ளது.
எனது குழந்தைகள் என்னை ஒரு பத்து நிமிடமாவது என்னுடன் விளையாட வாருங்கள் என்று அழைக்கும் போது கூட என்னால் அதற்கான நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு நான் காவல்பணியில் இருக்க வேண்டி நிலை உள்ளது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இப்படியே தொடர்ந்தால், மன அழுத்தம் மேலும் அதிகமாகி எனது இதயம் துடிக்க மறந்து விட்டால் எனது குடும்ப உறவுகள் நடுத்தெருவுக்கு வந்துவிடும்’ என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில், நெல்லையில் ஆய்வு சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டவர், அங்கிருந்து கிளம்பும்போது, அவருக்கு சல்யூட் அடித்த சப்-இன்ஸ்பெக்டரான ஆடியோ வெளியிட்ட சப்இன்ஸ்பெக்டர் அருணாச்சலத்தை தனியாக அழைத்து பேசினார்.
அப்போது அருணாச்சலம், தான் ஆடியோ வெளியட்டது தவறு தான் ஆனால் மிகுந்த மன அழுத்தத்தால் வேறு வழியின்றி ஆடியோ வெளியிட்டு விட்டேன் என்று கூறியதாகவும், அதற்கு டிஜிபி சைலேந்திரபாபு, மனம் தளராமல் தொடர்ந்து பணியாற்றுங்கள் அதிகாரிகளின் டார்ச்சர் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன் என்று கூறியதுடன், உங்களுக்கு இடமாறுதல் வேண்டும் என்றால் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் என்றுஆறுதல் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு பாளையங்கோட்டையில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்தார்.
‘தமிழ்நாட்டின் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றவுடன், காவலர்களுக்கு வார விடுமுறை, பிறந்தநாள், திருமண நாள் அன்று லீவு கொடுக்க வேண்டும் vன பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், அவரது உத்தரவுகள் காற்றில் கலந்ததாகவே குற்றம் சாட்டப்படுகிறது.