சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்பட கடற்கரை மற்றும் புண்ணிய நதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நல்ல நேரம்,  படையல் எப்போது வைக்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை ஜோதிடர்கள் கணித்து வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் தை அமாவாசையானது இன்று ( ஜனவரி 21ஆம் தேதி 2023)  சனிக்கிழமை  கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் அமாவாசை திதியானது அதிகாலை 04.25 மணிக்கு துவங்கி, ஜனவரி 22ஆம் தேதி அதிகாலை 03.20 மணி வரை உள்ளது.  அமாவாசை திதியானது காலையிலேயே துவங்கி விடுவதால் காலையிலேயே நீராடி முன்னோர்களை வணங்குவது நல்லது.

இன்று  காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலமும், பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரையில் எமகண்டமும் உள்ளது. ராகு காலம், எம கண்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம்.

தை அமாவாசையின் சிறப்பு ?

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது.  பொதுவாக ஓவ்வொரு அமாவாசை தினங்களிலும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது  நல்லது. அப்படி தர்ப்பணம் கொடுப்பவர்கள் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது.

பொதுவாக தர்ப்பணம், சிரார்த்தம் என இரண்டு உண்டு. இதில் வித்தியாசமும் உண்டு. அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள்.

தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம். அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம்.

தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும். தர்ப்பணம் செய்வதால் முன்னோர்கள்  மகிழ்ச்சி அடைந்து, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள்.

எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.

இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிரச் செய்து, நம் குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதபடி காக்கும். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால்தான், வனவாச காலத்தில் இருந்த போது தன் தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தாா்.  அதனால், அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

சிரார்த்தம்:

ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலில் சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது ‘சிரார்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது’ என்கிறது கருட புராணம்.

யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?

தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ராகுகாலம், எமகண்டம் இல்லாத நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம்.

தை அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். வழித் தடங்கள் மாற்றப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத வண்ணம் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து வருகிறது. மேலும் ராமேஸ்வரம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று சேதுக்கரை, தேவிபட்டினம், பிரப்பனவலசை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளிலும் முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

சென்னையில் பெரும்பாலான மக்கள் முக்கிய கோவில் குளங்களிலும், கடற்கரைகளிலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். திருச்சி காவிரி கரையிலும் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.

இன்று தை அமாவாசை: அபிராமி பட்டரின் பக்தியை உலகறிய செய்த ஆதிபராசக்தியின் அற்புதம்..