குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் மாயமான ஆட்கொல்லி புலியான  T23 புலி  8 நாள்களுக்கு பின் சிசிடிவி கேமராவில் சிக்கியதை தொடர்ந்து, வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பகுதியில் உள்ள மலைக்கிராம மக்களையும், அவர்களின் கால்நடைகளையும் வேட்டையாடி வந்த டி23 என்ற ஆட்கொல்லி புலியை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புலி இதுவரை  மசினகுடி பகுதிகளில் 4 பேரை கொன்றுள்ளதுடன்,  30க்கும் மேற்பட்ட மாடுகளை வேட்டையாடி உள்ளது.

இந்த புலியை உயிருடன் பிடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால்,  T23 புலியை தேடி  வனத்துறையினர் கடந்த 18 நாட்களாக வனத்தில் முகாமிட்டு உள்ளனர். ஆனால், அந்த புலி வனத்துறையினரிடம் சிக்காமல் டிமிட்டி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், புலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் புலி நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட போஸ்பாரா டி23 புலி உலாவி வருவது காமிராவில் பதிவாகி உள்ளது.  மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி இருந்த அந்த புலி தெப்பகாடு, முதுமலை வழியாக போஸ்பாரா வன பகுதிக்கு சென்றுள்ளது என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து, போஸ்பாரா பகுதியில் மறைந்திருக்கும் டி23 புலியை பிடிக்க வனத்துறையினர் தேடி வந்தனர். ஆனால் தற்போது அந்த புலி மீண்டும் தேவர்சோல  மேபீல்டு பகுதியை நோக்கி செல்வதால் அதனை பிடிக்க வனத்துறையினர் விரைந்துள்ளனர்.