சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி இனிப்பு ஊட்டியது.

இதனைத் தொடர்ந்து நாளை நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இதற்காக சிட்னி மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா-வில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சிட்னியில் பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு ஆறிபோனதாகவும், நல்ல உணவாக இல்லை என்றும் இந்திய வீரர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே கொடுக்கப்படுவதாக புகாரளித்துள்ளது.

இதுகுறித்து டி-20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றிருக்கும் அணிகளுக்கு உணவு வழங்கும் ஐசிசி நிர்வாகிகளிடம் பிசிசிஐ புகாரளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதற்கான மைதானம் அவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து சிட்னி நகருக்கு வெளியே 45 நிமிட பயண தூரத்தில் இருப்பதாகவும் இதனால் அவர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.