லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது , “ஜி.எஸ்.டி.நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்’ என்று ஆவேசப்பட்டார்

மேலும் அவர், “ ‘ஈழத் தமிழர்களுக்குக் கடந்தகால மத்திய காங்கிரஸ் அரசு, துரோகம் இழைத்தது. இந்த ஒரு காரணத்துக்காகவே, அவர்களோடு (காங்கிரஸ்) கூட்டணி வைத்திருந்த தி.மு.க.வுடன் எனது ‘லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகம்’ கூட்டணி சேராது என்று அறிவித்தவன் நான்.

அந்த வகையில், காங்கிரஸுக்கு எதிராக, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க.வின்  தாமரையை மலரவைக்க மறைமுக ஆதரவும் அளித்தேன்.

ஆனாலும்கூட, கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பா.ஜ.க. அரசு கொண்டுவந்தபோது அதில் உள்ள சில குறைகளையும் விமர்சித்தேன்.   இப்போது மத்திய பா.ஜ.க.  அரசு கொண்டுவந்திருக்கும்  ஜி.எஸ்.டி எனும் ‘சரக்கு மற்றும் சேவை வரி’ என்பது தமிழ்த் திரையுலகைக் கடுமையாகப் பாதிக்கும்.  தமிழ்த் திரைப்பட உலகத்தையே அழித்துவிடும்.

இப்போது காலம் கடந்து தமிழ்த் திரையுலகம் போராட்டத்தை அறிவித்துள்ளது.  வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம். மழை வருவதற்கு முன்பே தூர் வாருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இப்போது வெள்ளம், வெள்ளம் என்று கத்துவதால் என்ன பயன்? ஜூலை 3-ம் தேதி வேலை நிறுத்தம் என்று திரையரங்க சங்கம்  30-ம் தேதி அறிவிப்பது சரிதானா?

வட இந்தியாவை வாழவைக்க நினைக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.  அது அவர்களுக்கு இருக்கும் பாசம். ஆனால், அதற்காக தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பிராந்திய மொழிப் படங்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு. மாநில அரசின் உரிமைகளை மீறி உள்ளே நுழைகிறது இந்த அரசு.

ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவிகிதம் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதிக்கிறது. மாநில அரசு அதே டிக்கெட்டுக்கு 30 சதவிகித கேளிக்கை வரி விதிக்கிறது. இதர வரிகளையும் சேர்த்து மொத்தம் 64 சதவிகித வரியை அரசுக்குக் கட்ட வேண்டிய நிலை.  மீதி இருப்பது வெறும் 36 சதவிகிதம். இந்த 36 சதவிகிதத்தில்தான் திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் பங்கு பிரித்துக்கொள்ள வேண்டிய நிலை.  உடலில் இருக்கும்  ரத்தத்தையெல்லாம் இப்படி உறிஞ்சிவிட்டால் நாங்கள் எப்படி வாழ முடியும்?

‘அடிக்கிற மாதிரி அடிப்போம்… வலிக்கிற மாதிரி நடியுங்கள்’ என்பதுபோல தமிழக அதிமுக அரசும், மத்தி பாஜக அரசும் நடந்துகொள்கின்றன.

70 வருட வரலாற்றில், எந்த மத்திய அரசு கேளிக்கை வரி விதித்திருக்கிறது? என்ன புதிய வரலாறு படைக்கிறீர்களா?

திரைத்துறையை அழிக்க நினைக்காதீர்கள். எவ்வளவு பெரிய தலைவர் இறந்தாலும் ஒருவாரத்துக்கு மேல் திரையரங்குகளை மூடமுடியாது. நாடு கொந்தளித்துவிடும். எச்சரிக்கையாக இப்போது சொல்கிறேன்… நாட்டில் நடக்கிற கொலை, கொள்ளை, பலாத்காரம் என எல்லாக் குற்றங்களையும் தடுக்கும் சக்தியாக, வடிகாலாக இருக்கிறது  திரைப்பபடம். அந்த திரைத்துறையை அழிக்க நினைக்காதீர்கள்… நாட்டில் சட்டம் ஒழுங்கே கெட்டுவிடும்!

அம்மா சினி கிரியேஷன்ஸ் சிவா  ‘நமது  பிரதமர் மோடியும், சூப்பர் ஸ்டார் ரஜினியும்  மிகவும் நெருக்கமானவர்கள்.  ஆகவே  ஜி.எஸ்.டி. விவகாரத்தில்  ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும்’  என்றார். ஆனால்,  நேற்று இரவு வரை ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை.

தன்னை வாழவைத்த திரையுலகுக்காக இதுவரையிலும் குரல் கொடுக்காத ரஜினிதான், தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுக்கப்போகிறாரா?” என்று ஆவேசமாக பேசினார் டி.ராஜேந்தர்.