சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை பவானி தேவி, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினார். அப்போது, தனது வாளை முதல்வருக்கு பரிசாக கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 3 வெண்கலம் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது. பதக்கம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தடகளம், வாள்வீச்சு, துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது.  இந்தியா சார்பில் ஒலிம்பிக்  வாள்வீச்சுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார்.  அவர் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்று வரை முன்னேறினார். ஆனால், அநத் சுற்றில் பிரான்ஸ் வீராங்கனையிடம் 7-15 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து இந்திய மக்களிடம் மன்னிப்பு கோரினார் பவானி தேவி.

இதையடுத்து, நாடு திரும்பிய அவர், இன்றுதலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரைத் தன் தாயாருடன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பவானிதேவி,   ”இப்போதுதான் முதன்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கிறேன். இந்தியாவிலிருந்தும் வாள்வீச்சு போட்டியில் முதன்முதலாக பங்கேற்றதும் நான்தான். இது எனக்கும் தமிழகத்தும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தான் ஒலிம்பிக்கில் பங்கேற்க உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வரை சந்தித்தேன். அப்போது,   நான் ஒலிம்பிக்கில் பயன்படுத்திய வாளை பரிசாகக் கொடுத்தேன். ஆனால் அவர் மீண்டும் அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்த வாள் தேவை எனக் கூறி திரும்ப என்னிடமா பரிசாக அளித்துவிட்டார். ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடியதாகக் கூறி பாராட்டினார்.  தனது பணி குறித்தும், மின்சாரத்துறையில்  வேலைசெய்து வருவது குறித்தும் கேட்டறிந்ததுடன், தமிழக அரசின் உறுதுணை நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையையும் அளித்திருந்தார்.

முதல்வரை சந்தித்த பிறகு,   விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்தோம். அவரும் பாராட்டினார். அடுத்ததாக மின்துறை அமைச்சரையும் சந்திக்க இருக்கிறோம்” என்று கூறினார்.

என்ன உதவியானாலும் செய்யத் தயார், அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும் எனக் கூறினார்.  விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்தோம். அவரும் என் அம்மாவைப் பாராட்டினார். வருங்காலத்தில் உதவிகரமாக இருப்பதாக நம்பிக்கை அளித்தார். மின்துறையில் வேலை செய்வதால் அது குறித்தும் முதல்வர் கேட்டிருந்தார். அடுத்ததாக மின்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளோம்.

இந்த அளவு நான் சென்றிருக்கிறேன் என்றால், எஸ்டிஏடி (sport development authority of tamilnadu) அமைப்பிலிருந்து வரும் ‘எலைட் ஸ்காலர்ஷிப்’ எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த உதவி, கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு முக்கியமாக இருந்தது. வெளிநாடுகளில் பயிற்சி பெற்று, ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட முடிந்தது. இன்னும் பக்கபலமாக இருந்தால் நன்றாக விளையாடி நம் நாட்டுக்கு அதிக பதக்கங்களை வெல்வேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எனக்கு ஊக்கம் தந்தார். ஒலிம்பிக் சென்றால் பதவி உயர்வு நிச்சயம் கொடுப்பார்கள். முதல் முறையாகச் சென்றால் இன்னும் நல்ல பதவி கொடுப்பார்கள். அதனை நான் எதிர்பார்க்கிறேன். ஏற்கெனவே எனக்குப் பிற மாநிலங்களிலிருந்தும் மத்திய அரசிடமிருந்தும் வேலைக்கான அழைப்புகள் வந்தன. ஆனால், எனக்குத் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் இங்கு இருக்கிறேன். இதில் பாசிட்டிவான செய்தி வரும் என நம்புகிறேன்”.

இவ்வாறு பவானி தேவி தெரிவித்தார்.