ஜெனிவா: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை மற்றும் தொகையின் அடிப்படையில், உலகளவில் இந்தியா 74வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு 73ம் இடத்தில் இருந்தது.

இந்தப் பட்டியலில் பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுவிஸ் அரசாங்கத்தின் மத்திய வங்கி நிர்வாகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டிற்கு முன்பு 88வது இடத்திலிருந்த இந்தியா 15 இடங்கள் முன்னேறி 73வது இடத்திற்கு வந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

சுவிட்சர்லாந்து மத்திய வங்கி அளித்திருக்கும் அறிக்கையின்படி பார்த்தால், இந்தியாவின் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சுவிஸ் வங்கி கணக்குகளில் வைத்திருக்கும் தொகையானது, சுவிஸ் வங்கியில் ஒட்டுமொத்தமாக வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டினரின் தொகையுடன் ஒப்பிடும்போது 0.07% மட்டும்தான் எனும்போது, அந்த வங்கியில் பதுக்கப்பட்டிருக்கும் பெரும் முதலைகளின் பணம் எவ்வளவு இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ளலாம்!

கடந்த 2018ம் ஆண்டின் நிலவரப்படி, சுவிஸ் வங்கியில் இருக்கும் பிரிட்டன் நாட்டினரின் பணம் மட்டும், ஒட்டுமொத்த தொகையில் 26%க்கும் மேல் என்பது கவனிக்கத்தக்கது.

பிரிட்டனுக்கு அடுத்து இந்தப் பட்டியலில் அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஃபிரான்ஸ் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் வருகின்றன. பட்டியலில் முதல் 5 இடங்கள் வகிக்கும் இந்த நாடுகள் மட்டுமே, சுவிஸ் வங்கியின் மொத்த தொகை அளவில் 50%க்கும் மேலாக வைத்திருக்கின்றன.

அதேசமயம், முதல் 15 இடங்களுக்குள் வரும் நாடுகள் மொத்த மதிப்பில் 75% யையும், முதல் 30 இடங்களுக்குள் வரும் நாடுகள் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 90% யையும் கொண்டுள்ளன.

முதல் 10 நாடுகளின் பட்டியலில் பஹாமாஸ், ஜெர்மனி, லக்ஸம்பர்க், கேய்மன் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் அடக்கம்.