பெர்ன்

செல்லாத நோட்டுக்களை மாற்றிக் கொள்ள விதித்துள்ள 20 வருஷக் கெடுவை மாற்றிக் கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசு வங்கிகளுக்கு அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் 1921 ஆம் ஆண்டின் சட்டப்படி அந்த நாட்டு கரன்சி நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டால் குறிப்பிட்ட காலம் வரையே மாற்ற முடியும்.   அதன் பிறகு அந்த நோட்டுக்கள் அழிக்கப்படவேண்டும் என வங்கிகள் அறிவித்துள்ளன.    இது குறித்து அந்நாட்டின் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின் போது தற்போதைய நவீன உலகில் பலரும் பல நாடுகளில் வாழ்ந்து வருவதாகவும்,  அவர்களால் குறிப்பிட்ட கெடுவுக்குள் நாட்டு வர இயலாத நிலை ஏற்பட்டால் அவர்களுடைய பணம் அனைத்தையும் இழக்க நேரிடும் எனவும் வாதிடப்பட்டது.  இதன் மூலம் பல மக்கள் தங்கள் கடின உழைப்பினால் ஈட்டிய பணத்தை இழந்து ஏழையாகும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டது.

அதனால் தற்போது சுவிட்சர்லாந்து வங்கிகள் அறிவித்துல்ளபடி 20 வருட கெடுவை ரத்து செய்து எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என உத்தரவிடுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.    இதனால் மோசடி நடக்கும் என அச்சம் இருப்பதால் குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் மட்டுமே இவ்வாறு மாற்றிக் கொள்ள அனுமதிக்கலாம் எனவும்,  இந்த பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது என்பதற்கு சரியான கணக்கு வழங்கப்படவேண்டும் என வங்கிகள் அறிவுறுத்த வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள பணமான பிரிட்டனின் பவுண்டு மற்றும் ஸ்டெர்லிங்குகள்,  அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ ஆகியவற்றை மாற்றிக் கொள்ள எந்தக் காலக் கெடுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.