சென்னை: உணவுப்பொருட்கள் டெலிவரி செய்யும் சுவிக்கி, சோமாட்டோ, டன்சோ தொழிலாளர்கள் அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இணையதள வர்த்தகம் மூலம் வீடு, வீடாக பொருள் வினியோகிக்கும் தொழிலாளர்களுக்கு புதிய நலவாரியம் அமைக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகபாதுகாப்பு மற்றும் நலவாரியம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்விகி, சோமாட்டோ, டன்சோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் கிக் (Gig) தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தனி நலவாரியம் அமைக்கப்படும் என சுதந்திர தின உரையின்போது அறிவித்தார்.
அதன்படி தனி நல வாரியம் உருவாக்குவதற்காக இணையம் சார்ந்த கிக் தொழில்களை தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டம், 1982-ன் அட்டவணையில் சேர்த்து அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மேலும், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாரியத்திற்கான திட்டக் கூறுகள் இயற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் கிக் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு பெற்று பயனடைய வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாரியத்தில் 18 முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள், பணிபுரியும் நிறுவனம் அல்லது தொழிற்சங்கங்களிடமிருந்து பணிச் சான்று பெற்று www.tnuwwb.tn.gov.in எனும் இணையதளத்தில் GIGW எனும் குறியீட்டின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.