சென்னை:
ன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில், டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை சப்ளை செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில், ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உணவு டெலிவரி தளத்தில் பணிபுரிபவர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஸ்விக்கி நிறுவனம் புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. அதில் பணியாளர்களின் 12 மணி நேர வேலை நேரம் 16 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஊக்கத்தொகையும் குறைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஊக்கத்தொகை குறைந்தது ஒருபுறமிருக்க எவ்வளவு நேரம் , எத்தனை ஆர்டர்களுக்கு உணவு டெலிவரி செய்தாலும் குறிப்பிட்ட அளவே ஊதியம் வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர். குறைவான ஊதியம், குறைக்கப்பட்ட ஊக்கத்தொகை மற்றும் வேலை நேரம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஸ்விக்கி உணவு டெலிவர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய நடைமுறையே மீண்டும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காலை 3 மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்தம் மாலை வரையில் தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு ஆர்டர்கள் டெலிவரி செய்ய முடியாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.