சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி, புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் தந்தைக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருதலைக்காதல் காரணமாக, நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த ராம்குமார் என்பவர், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுவாதி என்ற இளம்பெண்ணை, வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானர். அவரை கைது செய்த காவல்துறையினர், புழல் சிறையில் அடைத்திருந்த நிலையில், அங்கு, மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக, காவல் துறை தெரிவித்தது.

இது தொடர்பான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நேற்று   மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன்  உத்தரவு பிறப்பித்தார். அதில் ‘மின்சார வயரை ராம்குமார் கடித்தபோது, லத்தியால் தள்ளி, அவரை காப்பாற்ற முயன்றேன்’ என சிறை வார்டன் பேச்சுமுத்து கூறினார் என்பதை சுட்டிக்காட்டியதுடன்,  கைதிகளின் பாதுகாப்பை யும், மனித உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டியது, சிறை அதிகாரிகளின் கடமை. ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணத்தை, விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சிறையில் ராம்குமார் உயிரிழந்ததற்கு, தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

மனித உரிமை மீறலுக்காக, உயிரிழந்த ராம்குமாரின் தந்தை பரமசிவனுக்கு, தமிழக அரசு ஒரு மாதத்திற்குள், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, போதுமான அதிகாரிகளை, தமிழக அரசு நியமிக்க வேண்டும். ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதை கண்டறிய, சுதந்திரமான விசாரணை நடத்த, தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.