சென்னையில் ஜூன் 24ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.  ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பரவலாக புகார் எழுந்தது.
இதையடுத்து ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த “ சுவாதி மொபைல் அப்ளிகேஷன்”  என்ற ஆப்சை விரைவில் அறிமுகம் செய்ய  ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.
இந்த மொபைல் அப்ளிகேஷனை  ரயில்வே பாதுகாப்புப் படையினரோடு சுவாதி பணியாற்றிய இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்குகிறது.  தென்னக ரயில்வே  பாதுகாப்பு ஆணையர் அஷ்ரஃப், நேற்று இன்போசிஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து இந்த அப்ளிகேஷன் பற்றி ஆலோசனை நடத்தினார்.
images
ரயிலில் பயணிக்கும் பெண்கள் தங்களுக்கு எந்த நேரத்தில் உதவி என்றாலும்  இந்த  மொபைல் ஆப்பில் இருக்கும் SOS என்ற பட்டனை அழுத்தினால், அந்த அழைப்பு பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் அதிகாரிகளுக்கும், மொபைல் குழுக்கும் வரும்.  ஒரே நேரத்தில் பல குழுக்களை இது அலர்ட் செய்வதால், உடனடி நடவடிக்கையில் இறங்க வசதியாக இருக்கும்.  அருகிலுள்ள இரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு ஒருசில நிமிடங்களில் வந்துவிடுவார்கள்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் இந்த மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சாதாரண செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்ளிகேஷனில் சுவாதியின் பெயரை வைப்பதற்கு அவரின் பெற்றோரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்த இருப்பதாக  அதிகாரிகள்  தெரிவித்தனர்.