சென்னை: சந்திரகிரகணத்தின்போது பெரியார் திடலில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு சுக பிரசவம் நடைபெற்றுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மூட நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
பொதுவாக கிரகணங்களின்போது, கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்றும், இந்த நேரத்தில் சாப்பிடுவது கூடாது என்றும் பல ஆண்டுகளாக மக்களிடையே நம்பிக்கை உள்ளது. ஆனால், இதற்கு அறிவியல்பூர்வ சான்றுகள் இல்லை. ஆனால் மக்களிடையே இந்த பழக்க வழக்கங்கள் தொன்று தொற்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25ந்தேதி சூரிய கிரகணம் அன்று மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில், திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் மூடநம்பிக்கை ஒழிப்பு சிற்றுண்டி உணவு விருந்து நடைபெற்றது. கிரகணம் உச்சத்தில் தெரியும் நேரமான மாலை 5:30 மணிக்கு சிற்றுண்டி விருந்து நடத்தப்பட்டது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட பல கர்ப்பிணி பெண்களும் கலந்துகொண்டு உணவு உண்டனர். இந்த நிகழ்ச்சியில் எழிலரசி என்ற நிறைமாத இளம் கர்ப்பிணியும் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், எழிலரிசிக்கு நேற்று ஆரோக்கியமான முறையில் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் கிரகண நேரத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாது, வெளியே வரக்கூடாது என்பது போன்ற மூட நம்பிக்கைகள் தகர்த்தெறியப்பட்டுள்ளது.