டில்லி:

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்,  தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியா பேரிழப்பு என்று கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒரு பெண்ணாக, பொது வாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக பெண்மையோடு கூடிய ஆளுமை அந்த நாட்டின் தலைவிக்குள்ளே ஒரு குடும்பத்தலைவியை நான் சுஷ்மாசுவராஜ் மேடம் அவர்களிடம் கண்டிருக்கிறேன்அன்பு அறிவு ஆற்றல் ஆளுமை எளிமை அனைத்தும் கொண்ட தலைவி.என் நெஞ்சம் கண்ணீர் வடிக்கிறது.தனிப்பட்டமுறையில் எனக்கு பேரிழப்பு

திமுக எம்.பி., கனிமொழி கூறுகையில், ஆளுமையும் அன்பும் நிறைந்த பெண் தலைவராக இருந்தவர் என்றும், கட்சிகள், மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு உதவியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம், சுஷ்மா ஸ்வராஜ் ஜி காலமானார் என்ற செய்திக் கேட்டு  ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவர் தனது கட்சிக்கும் நாட்டிற்கும் விசுவாசம், பக்தி மற்றும் வேறுபாடின்றி பணியாற்றினார். வெளியுறவு மந்திரி அலுவலகத்தில் ஒரு புதிய, மக்கள் நட்பு பரிமாணத்தை அவர் சேர்த்தார் அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்.

டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. அவரது மறைவு பாரதிய ஜனதாவுக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு இரங்கல்.

இவ்வாறு குறிப்பிட்டு உள்ளனர்.