சென்னை:

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் முதலாண்டு நினைவு நாள் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில்  தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு (2018) ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக  உடல் நலக்குறைவால் காலமானார்.  இன்று அவரது முதலாம் ஆண்டு  நினைவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னை அண்ணாசாலையில் இருந்து கலைஞர் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கி தலைவர் நினைவகம் வரை நடைபெறும் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்

வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  தொடர்ந்து கலைஞர் நினைவிட வளாகத்தில் மு.க.ஸ்டாலின் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

அதைத்தொடர்ந்து, திமுக தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்த திரண்டு உள்ளனர்.

இன்று மாலை  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில்  கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.  அதைத்தொடர்ந்து, சென்னை   ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.