மும்பை: தோனி பட நடிகர், சுஷாந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் பாலிவுட்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணம் பாலிவுட்டையே உலுக்கியது.  அவரது தற்கொலை, கொலை என்றும், போதைப்பொருள் கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. 

ஆனால், காவல்துறை, உடற்கூறாய்வு அறிக்கைகள் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறின. இந்த நிலையில்,  பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை அல்ல, கொலை தான், அவரது உடல் நொறுங்கிய நிலையில்தான் பிணவறைக்கு கொண்டு வரப்பட்டது  என பரபரப்பு தகவலை மருத்துவமனை பிணவறை ஊழியர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திப்பட உலகில் வளர்ந்து வந்த இளம்நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  எம்எஸ்தோனியில் நடித்து புகழ் பெற்றார். இவர் படவாயப்புக்காக குடும்பத்தினரை விட்டு பிரிந்து, மும்பையில் வசித்து வந்த நிலையில், கடந்த  2020 ஆம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்

. அவர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் சுஷாந்த் சிங் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.  இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணை யின்போது,  சுஷாந்தின் காதலி, ரியா சக்கரவர்த்தி, சித்தார்த் பிதானி மற்றும் வீட்டு வேலைக்காரர்கள் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாகவும், பயன்படுத்தியதாகவும் கூறி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்தது.

இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்து இரண்டு ஆண்டுகள்  நிறைவடைந்துள்ளது. ஆனால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மம் விலகாத நிலையில், அவரது உடலை உடற்கூறாய்வு செய்யும்போது உடனிருந்த பிணவறை ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது மீண்டும் பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுஷாந்த் சிங்கை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர் ரூப் குமார் ஷா  சுஷாந்த் மரணத்தில் இருந்த மர்மங்கள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அது  சர்ச்சையாகி இருக்கிறது. அவரது பேட்டியில்,  “சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த அன்று, அவரது உடல் உள்பட  கூப்பர் மருத்துவமனையில் ஐந்து உடல்களை பிரேத பரிசோதனை செய்தோம். ஐந்து உடல்களில் ஒன்று விஐபியின் உடல்.  அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த போது, சுஷாந்த் சிங் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. தொடர்ந்து  அவரது உடல் பிணவறைக்கு வந்ததது.

அவரது உடலை நான் பார்வையிட்டேன், அவரது உடலில் பல தடயங்கள் இருந்தன. அவரது  கழுத்தில் இரண்டு மூன்று அடையாளங்கள் இருந்தது.  மேலும், சுஷாந்த் உடலின் பல பகுதிகள்  சிதைந்த நிலையில் இருந்ததாகவும், கை, கால்கள் உடைந்த நிலையில் இருந்தது. அதனால்,  அவர் தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை, அது சாத்தியமற்றது”. சுஷாந்தின் உடலை முதன் முதலில் பார்த்த போது அது தற்கொலை அல்ல கொலை என்று நினைத்தேன். இதை உயர் அதிகாரிகளிடம் சொன்னேன்.  இதனால், அவரது உடலை புகைப்படம் எடுக்க கூறினேன். ஆனால்,  உயர் அதிகாரிகள் உடலின் படங்களை மட்டும் கிளிக் செய்யுமாறு கூறினர்.  பிரேதப் பரிசோதனையை பதிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், அதை செய்யவில்லை. நான் அவர்களை மீறி செயல்பட முடியவில்லை,  விதிகளின்படி வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், “உடலை விரைவில் பிரேத பரிசோதனை செய்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதனால் இரவில் பிரேத பரிசோதனை செய்ததாகவும், இது தற்கொலை இல்லை, கொலை எனவும்” என அதிர்ச்சி தகவலை  மருத்துவமனை ஊழியர் ரூப் குமார் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது மீண்டும் பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.  இந்த தகவலை தெரிவித்துள்ள ரூப் குமார் ஷா, பிரபலமான கூப்பர் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அதனால், தற்போது அதிர்ச்சிகரமாக தகவலை வெளியிட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த  சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.