சென்னை: சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் படம், உண்மை நிகழ்வுகளை மறைத்து, இந்துக்கள் மற்றும் வன்னியர் சமுதாயத்தினர் மீது குற்றம் சாட்டும் வகையில் இருப்பதாக பல தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், வன்னியர் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் சூர்யா தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், நடிகர் சூர்யா படங்கள் ஓடும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்றும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம்  வெகுவான பாராட்டுகளை பெற்றுள்s நிலையில், அதில் உள்ள சில காட்சிகள் ஒரு சமுதாயத்தினரை குற்றம்சாட்டும் வகையில் இருந்தாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வன்னியர் சங்கத்தினர் போர்க்கொடி தூக்கிய நிலையில், சர்ச்சைக்குரிய காட்சியில் திருததம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இது சர்ச்சையான நிலையில், அதற்கு நடிகர் சூர்யா பதில் அளித்து கடிதம் எழுதியிருந்தார்.

அதில், படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்ற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, படைப்பு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளதாக காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து மனோஜ் ஊடகம்த ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜெய்பீம் படத்தில் இருளர் சமுதாயம் எந்த அளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்து காட்டியுள்ளனர் என்பதால் அது மக்களுக்கு தேவையான திரைப்படம் என்று சூர்யாக கூறுகிறார்.  ஆனால், உண்மை கதை என்றுசொல்லிவிட்டு வில்லனை வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவராக காட்டியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி. ஆனால் அந்த கதாப்பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குருவை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது, மேலும் சில காட்சிகள் தமிழ்நாட்டில் வாழும் வன்னியர் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன.

வில்லனாக காட்டியுள்ள போலீசாரின் வீட்டிற்குள் வன்னியர் சங்க காலெண்டரை தொங்கவிட்டது ஏன்?  அந்த காவல் உதவி ஆய்வாளருக்கு குரு என பெயர் வைத்ததற்கு பதிலாக, தீரன் சின்னமலை என்ன பெயர் வைப்பாரா சூர்யா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்காக நடிகர் சூர்யா ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சூர்யாவின் எந்த படமும் இனி தியேட்டர்களில் ஓட்ட முடியாது. மீறி திரையிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம் என ஆவேசமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், பாமக போட்டியிட்ட 23 சட்டமன்ற தொகுதிகளில், பாமகவுக்கு எதிராகவும், திமுகவுக்கும் ஆதரவாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, மருமகன் மனோஜ் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து பாமகவுக்கு தோல்வியை ஏற்படுத்த  காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.