டில்லி
ஆக்ஸ்ஃபாம் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 40 அதிகரித்து ஏழைகள் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பல தொழில்கள் முடங்கின. இதனால் பலரும் செல்வத்தை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் செல்வந்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒரு கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆக்ஸ்ஃஃபாம் நிறுவனம் ஒரு கணக்கெடுப்பு எடுத்து முடிவை வெளியிட்டுள்ளது.
அதில் காணப்படுவதாவது :
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவலிலும் ஒரு சில தொழிலதிபர்கள் நிறையச் செல்வம் சேர்த்துள்ளனர். இதனால் மொத்தம் 142 செல்வந்தர்கள் இருந்த நிலையில் சென்ற வருடம் மேலும் 40 பேர் செல்வந்தர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர். மொத்தமாக அவர்கள் 7200 கோடி டாலர் அளவுக்குச் செல்வத்தை அதிகரித்துள்ளனர். இது குறிப்பாகப் பங்குச் சந்தையில் பங்கு கள் உயர்ந்ததால் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் வருடம் மாநிலங்களில் சொத்து வரியை ரத்து செய்தது செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்கள் ஆக்கி உள்ளது. அதே வேளையில் கொரொனா இரண்டாம் அலை பரவலால் பலர் பணி இழந்துள்ளனர். கடந்த வருடம் மே மாதம் மட்டும் மொத்தம் 15% பேர் பணி இழந்து ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். ,
கடந்த வருடம் உலக அளவில் மிகக் குறைந்த தினசரி ஊதியமான ரூ.178 கூட ஈட்ட முடியாத நிலைக்குப் பலர் தள்ளப்பட்டனர். தவிர பலர் தினசரி உணவுக்கு தேவையான பணம் கூட சம்பாதிக்க முடியாத நிலையை அடைந்துள்ளனர். இது கொரோனா இரண்டாம் அலையின் போது கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் சென்ற வருடம் ஏழைகள் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது.