பரிமலை

சென்னை பக்தர் ஒருவர் பம்பையில் இருந்து சபரிமலைக்கு அங்கப்பிரதட்சணமாகச் சென்றுள்ளார்.

சபரிமலை சன்னிதானத்துக்குப் பம்பையில் இருந்து நீலிமலை, சுப்பிரமணிய பாதை என்று 2 பாதைகள் உள்ளன. சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் உள்ள இந்த பாதைகள் மிகவும் கடினமான பாதைகளாகும். இதில் நீலிமலை பாதை பல இடங்களில் செங்குத்தாக இருக்கும்.  ஆகவே நல்ல திடகாத்திரமாக உள்ளவர்களால் மட்டுமே மலையேறிச் செல்ல முடியும்.

ஆயினும் ஒரு கால் இல்லாத, சரியாக நடக்க முடியாத, உடல் ஊனமுற்ற ஏராளமானோர் இந்த பாதை வழியாக பக்திப் பரவசத்துடன் ஏறிச் செல்வதைப் பார்க்க முடியும்.  அப்படி இருக்கச் சென்னையைச் சேர்ந்த அனந்த பத்மநாபன் என்ற பக்தர் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு நேற்று அங்கப்பிரதட்சணம் செய்து சென்றார்.

நேற்று முன்தினம் தன்னுடைய மகனுடன் பம்பைக்கு வந்த அனந்தபத்மநாபன் பம்பையிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்தபடி சன்னிதானத்தை நோக்கிச் சென்றார்.  ஏராளமான பக்தர்கள் அவருக்குப் பின்னால் சரண கோஷம் எழுப்பியபடி சென்றனர்.  அனந்தபத்மநாபன் நேற்று இரவு மரக்கூட்டம் பகுதியில் தங்கி விட்டு இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு சன்னிதானத்தை அடைந்தார்.  பிறகு அவர் சாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பினார்.

இவ்வாறு சபரிமலை சன்னிதானத்திற்கு ஒரு பக்தர் அங்கப்பிரதட்சணம் செய்தபடி வருவது மிகவும் அபூர்வமான சம்பவமாகும் என்று சபரிமலை கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.