பாட்னா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தாக்கியது குறித்து காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் சிங் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் ராணுவத்தினரும் ஊடுருவ உள்ளதாக ரகசியத் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து இந்திய ராணுவம் அந்தப் பகுதியில் சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் தீவிரவாத ஒழிப்பு தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது இரு தரப்புக்கும் இடையில் கடும் போர் நடந்துள்ளது.
இதில் இரு இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என இந்தியத் தரப்பில் மூவர் மரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். அத்துடன் பலர் காயம் அடைந்துள்ளனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் அதிக சேதம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகிலேஷ் சிங், “இது போல ஒரு மிரட்டல் மற்றும் தாக்குதல்கள் குறித்து ஊடகம் மூலமாக நான் அறிந்தேன். நாட்டில் முக்கியமான மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுகிறது. தற்போது தீவிரவாத அழிப்பு தாக்குதல் என்பது அரசியல் ஆகி உள்ளது. நாட்டில் உள்ள பல முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை மத்திய அரசு இவ்வாறு திசை திருப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.