வாஷிங்டன்: இந்தியாவில் நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சியானது, 6.1 சதவீதமாக இருக்குமென ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.

முன்னதாக நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதமாக இருக்குமென கணித்திருந்த போதிலும், உலக பொருளாதார மந்த நிலையில் 1.2 சதவீதம் குறைத்தே கணிப்பிடப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரமானது, வணிகத்தில் நிலவும் நிலையற்ற தன்மையினால், அடுத்துவரும் ஆண்டுகளில் மந்தமான நிலையை காணுமென்று ஐ.எம்.எஃப் நிறுவனம் தனது ஆய்வில் கூறியுள்ளது. இதனை 3.2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளது.

சீனாவின் வளர்ச்சி விகிதமும் மெதுவானதாகவே இருக்கும். அது 4.4 சதவீதம் குறைந்து காணப்படும். உலக வளர்ச்சிக்கு அமெரிக்காவின் பங்கு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டாலும் அது 2024ல் இந்தியாவை விட குறைந்த அளவே பங்களிப்பு செய்யுமென ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.

மேலும், இப்போது எடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் வரும் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்குமெனவும் சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.