சூரத்

ழக்கமாகப் பண்டிகை நாட்களில் சுறுசுறுப்பாக இயங்கும் சூரத் ஜவுளிச் சந்தை தற்போது பரபரப்பின்றி இயங்குகிறது.

இந்தியாவின் முக்கிய ஜவுளிச் சந்தைகளில் சூரத் சந்தை மிகவும் முக்கியமானதாகும்.  பல சில்லறை வியாபாரிகள் இந்தச் சந்தையில் மொத்த விலையில் துணிகள் வாங்கி நாடெங்கும் விற்பனை செய்து வருவது வழக்கம்.   வழக்கமான கூட்டத்தை விடப் பண்டிகை நாட்களான தீபாவளி நாட்களில் ஏராளமான கூட்டம் வருவது வழக்கமாகும்.

இந்த சந்தையில் மொத்த விற்பனை அதிகம் என்பதால் ஆர்டர்கள் இந்த கால கட்டத்தில் குவிந்து அனைத்து விற்பனையாளர்களும் மகிழ்வுடன் இருப்பார்கள்.   ஆனால் தற்போது சூரத் ஜவுளிச் சந்தையில் வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களை விட குறைவானவர்களே வருவதால் மிகவும் அமைதியாகக் காணப்படுகிறது.

இது குறித்து மொத்த விற்பனை வர்த்தகர் ஒருவர் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் 40% விற்பனை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இதற்கு முக்கிய  காரணம் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மீண்டும் கிடைக்காததால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே காரணம் எனவும் அவர் கூறி உள்ளார்.  மேலும் உற்பத்தி முதல் விற்பனை வரை ஜவுளித் துறை கடும் சரிவைச் சந்தித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் முக்கிய துறையான ஜவுளித்துறை இவ்வாறு விற்பனைச் சரிவில் உள்ளது பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.