டில்லி

ங்கிக் கணக்குக்கான தொடக்க விதிகளை மாற்றுவது குறித்து நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

வங்கிக் கணக்கு மூலம் பண மோசடி செய்வதைத் தடுக்க நிதி அமைச்சகம் பல விதிகளை இயற்றி உள்ளது.   அவற்றில் முக்கியமானது வங்கிக் கணக்கு தொடக்க விதிகள் ஆகும்.   ஒருவர் எளிதாக வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பண மோசடி செய்வதைத் தடுக்க இந்த விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கிய விதி முகவரிச் சான்று அளிக்க வேண்டும் என்பதாகும்.   அவ்வகையில் வங்கிகள் ஆறு சான்றுகளில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.  அவை வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், தேசிய மக்கட்தொகை  பட்டியல், ஆதார் மற்றும்  நூறு நாட்கள் பணி உத்தரவு ஆகியவை ஆகும்.

வாடிக்கையாளர்களால் இந்த முகவரிச் சான்றுகள் தர இயலாத நிலை இருந்து வருகிறது.   குறிப்பாக இருப்பிடம் மாற்றியவர்களால் மேலே குறிப்பிட்ட ஆவணங்களில் உள்ள முகவரியை உடனடியாக மாற்ற முடியாமல் உள்ளனர்.   இதனால் பலருக்கு  புதிய கணக்குகளைத் தொடங்குவது மட்டுமின்றி ஏற்கனவே உள்ள கணக்குகளை அருகில் உள்ள கிளைகளுக்கு மாற்றுவதும் இயலாததாக உள்ளது.

எனவே வங்கி நிர்வாகிகள் இது குறித்து ஆவன செய்து விதிகளை மாற்றி அமைக்க நிதி  அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   நிதி அமைச்சகம் இந்த விதிகளை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.   இந்த  புதிய கணக்கு தொடக்க விதிகள் பண மோசடியைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ளதால் அந்த விதிகளிலும் மாறுதல் வரலாம் எனக் கூறப்படுகிறது.