சென்னை: நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்து சூரப்பா தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280கோடி ரூபாய் ஊழல்  தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அதிமுக அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தியது.  இதற்கிடையில் சூரப்பாவின் பதவி காலமும் முடிவடைந்துவிட்டது. அதுபோல நீதிபதி கலையரசன் விசாரணையும் முடிவடைந்த கடந்த 2021 ஆகஸ்டு மாதம் விசாரணை அறிக்கை தமிழகஅரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னதாக  நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்து சூரப்பா தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், விசாரணை ஆணையம் தொடர்பான வழக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. கடந்த விசாரணையின்போது, தமிழகஅரசு, விசாரணை ஆணையத்தின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், திமுக அரசு, சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறி நழுவிக்கொண்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.