சென்னை:

ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார் இது வருத்தமளிக்கிறது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் நியமனம் செய்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் காவிரி பிரச்சினை வலுப்பெற்று வரும் நிலையில், கர்நாடகாவை சேர்ந்தவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்திருப்பதற்கு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எத்தனையோ கல்வி வல்லுநர்கள் உள்ள நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை நியமனம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு  அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாமக சார்பில் வரும் 9ந்தேதி சென்னையில் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்ப்பு இல்லை என்று கூறினார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு  துணைவேந்தரை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார். இது வருத்தமளிக்கிறது என்று கூறிய அவர், தமிழகத்தில் அப்துல்கலாம் போன்ற எத்தனையோ  படித்த வல்லுனர்கள் உள்ளனர் என்றும் கூறினார்.