இந்துமதத்தின் உச்சபட்ச துறவி துன்புறுத்தலுக்கு ஆளானதாக பெண் துறவி ஒருவர் ஐ.நா. சபையில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான (CESR) குழுவின் 19வது கூட்டம் பிப்ரவரி 22 ம் தேதி நடைபெற்றது.

இதில் ஐக்கிய கைலாசா நாடுகள் என்ற நாட்டின் பெயரில் அதன் பிரதிநிதி மா விஜயப்ரியா நித்யானந்தா என்பவர் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு அடங்கிய வீடியோவை ஐக்கிய நாடுகள் சபை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் ஐக்கிய கைலாசா நாட்டை நிறுவிய நித்யானந்தா இந்து மதத்தின் உச்சபட்ச துறவி என்றும் அவர் பிறந்த நாடான இந்தியாவில் அவர் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.

பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான மாநாட்டில் இந்து மதம் குறித்தும் அதில் ஐக்கிய கைலாசா என்ற பெயரில் ஒரு நாடு கலந்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா. சபையால் இந்த நாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அப்படி அங்கீகாரம் பெற்றிருந்தால் அது எந்த வகையில் அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

இருந்த போதும் அந்நாட்டின் தலைவர் இந்தியாவில் துன்புறுத்தப்பட்டதாக கூறியிருப்பது குறித்து இந்திய அரசோ அல்லது அதன் வெளியுறவுத் துறையோ இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான போலி சாமியார் நித்யானந்தா கடந்த 2019 ம் ஆண்டு முதல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி அட்ரஸ் இல்லாத ஒரு நிலப்பரப்பை வாங்கி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நித்யானந்தாவின் சிஷ்யை என்ற பெயரில் ஐ.நா. சபையில் பேசியுள்ள ஒருவர் இந்தியா மீதும் இந்துமத துறவிகள் துன்புறுத்தப்படுவது குறித்தும் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதானி மற்றும் மோடி குறித்து வெளிநாட்டில் உள்ள உலகமகா பணக்காரர்கள் யாரும் கேள்வி எழுப்பினால் அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு பொங்கி வரும் வெளியுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் ஐ.நா. சபையில் ஐக்கிய கைலாசா நாட்டு பிரதிநிதி கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து இதுவரை வாய்திறக்காமல் இருப்பது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.