காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது!: கமல்

Must read

சென்னை:

காவிரி  மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தமிழகத்தில்  கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீரின் அளவை மேலும் குறைத்து தீர்ப்பு வழங்கியிருப்பதற்கு தமிழக விவசாயிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உச்சநீதி மன்றத்தில் இன்றைய  தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக  நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த கமல், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசினார்.

அப்போது, காவிரி வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது, தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம்தான். இருந்தாலும்,  காவிரியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று கூறினார்.

மேலும், நாம் குரங்காக இருந்தபோதே காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது, அதை யாரும் உரிமை கொண்டாட முடி யாது என்றும், இந்த தீர்ப்பு காரணமாக தமிழகத்துக்கான நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள போதும்,  நமக்கு கிடைக்கும் தண்ணீரை நாம் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்றும் அதனை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த  தீர்ப்பை வைத்து அரசியல் கட்சிகள் ஓட்டு விளையாட்டு விளையாட கூடாது என்ற கமல், ஓட்டுக்காக அரசியல்வாதிகள் காவிரி சர்ச்சையை தூண்டிவிடக் கூடாது என்றும்,  பற்றி எரியும் வீட்டில் பீடி பற்ற வைக்கி றேன் என அரசியல் கட்சிகள் வாக்கு வேட்டையாடுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

நிலத்தடி நீரை அரசு பாதுகாக்கவில்லை எனில் நாம் பாதுகாப்போம் என்ற கமல், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராடுவது உதவாது, இப்பிரச்சினையில் தீர்வு காண முயற்சிப்பதே சிறந்தது என்றார்.

இதுபோன்ற பிரச்சினைகளில்  இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருந்தால்தான் நதிகளை இணைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

More articles

Latest article