டெல்லி: அ.தி.மு.க.  பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய சட்ட ஆணையத்தின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது,. அதிமுக  இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை  எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்,.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த சில வாரங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையின்போது,   இரு தரப்பினரையும், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜனவரி 4ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. ஏற்கனவே பல கட்ட விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே தேர்தல் ஆணையம் எடப்பாடி தாக்கல் செய்த வரவு செலவு கணக்குகளை அங்கீரித்துள்ள நிலையில், மத்திய சட்ட ஆணையமும் எடப்பாடியை அதிமுக தலைவராக ஏற்றுள்ள கடிதம் அனுப்பி உள்ளது. இதனால், தேர்தல் ஆணையமும், மத்தியஅரசும், அதிமுக தலைவராக எடப்பாடியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய தீர்ப்பு யாருக்கு ஆதரவாக வரும் என்பதில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளனர்.  இருப்பினும் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும் என்பது இன்று மாலை தெரிய வரும் என நம்பப்படுகிறது.