‘லாட்டரி’ மார்ட்டின் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி மார்ட்டின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

லாட்டரி ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில் சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கு விசாரணை நியாயமற்றது என்று மார்ட்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ வழக்கு முடியும் வரை அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு அளித்த நிலையில் அதனை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ வழக்கு முடியும் வரை பணமோசடி தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.