புதுடெல்லி: அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுக் கைதிகளின் விடுதலை தொடர்பாக அசாம் மாநில அரசு வகுத்துள்ள திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

அசாம் சிறைகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அடைபட்டு இருக்கும் அறிவிக்கப்பட்ட வெளிநாட்டவரை விடுவித்து, அவர்களை மீண்டும் நாடு கடத்துவது தொடர்பான உறுதிச்சான்றை தயாரித்தது அசாம் மாநில பாரதீய ஜனதா அரசு.

ஆனால், இந்த உறுதிச்சான்று மாநில அரசின் தோல்வியைக் காட்டுவதாக இருப்பதாய் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், மாநில அரசின் இந்த செயல்பாட்டில் தானும் ஒரு பங்கேற்பாளனாக இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளது.

மேலும், “லட்சக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள், மக்களுடன் மக்களாக கலந்து, வாக்குரிமையும் பெற்றுள்ள சூழலில், வெறும் 900 கைதிகள் விஷயத்தில் மாநில அரசு நடந்துகொள்ளும் முறை சரியல்ல.

அவர்கள், சிறைகளில் மனிதத்தன்மையுடன் நடத்தப்படவில்லை” என்று கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.

5 லட்சம் பணயத்தொகை, முகவரி சரிபார்ப்பு மற்றும் அவர்களின் உயிரியல் அங்க அடையாளங்களைப் பெறுவது ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களின் விடுதலை‍யை மேற்கொள்வதென அசாம் அரசின் உறுதிச்சான்று தெரிவிக்கிறது.