சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியை உச்சநீதி மன்றமும் கைவிட்டது!

Must read

டில்லி:

பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக, தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்த பாலகிருஷ்ணரெட்டி, தன்மீதான தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினார்.

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

ஆனால், உயர்நீதிமன்றம், தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த நிலையில், உச்சநீதி மன்றத்தை கதவை தட்டினார். ஆனால், தற்போது உச்சநீதி மன்றமும், சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

1998-ஆம் ஆண்டில் பாலகிருஷ்ணாரெட்டி பாஜகவில் இருந்தபோது,  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகனூரில் கர்நாடக எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசு பேருந்துகள் மீது  கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில்,  பாலகிருஷ்ணா ரெட்டி உள்பட 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு வந்ததுமே அமைச்சர் பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி ராஜிநாமா செய்துள்ளார். சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை  விசாரித்த உச்ச நீதிமன்றம், பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

மேலும்,மேல்முறையீடு வழக்கு விசாரணையில் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் என்ற நிலையில், இதுகுறித்த 4 வாராத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article