சென்னை:

தூத்துக்குடியில் இருந்து  சென்னை வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் எழும்பூர் ரயில் நிலையித்தில் திடீர் என மாயமானார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் சமூக ஆர்வலர் முகிலன். இவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு  மே மாதம் 22ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது வன்முறை பரவியது. இதன் காரணமாக காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக, காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வந்தார் முகிலன். கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது,   தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் வெளியிட்டார்.

அப்போது பேசிய முகிலன், காவல்துறையினர் மீதான ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து 15ந்தேதி இரவு  மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் சென்றார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அவர் மதுரைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போதுவரை முகிலன் எங்கிருக்கிறார்.. அவரை யார் கடத்தினார்கள் என்ற எந்தவொரு விவரமும் தெரியவில்லை.

இதுகுறித்து,  எழும்பூர் ரெயில்வே போலீசில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காவல்துறையினர் மீதான ஆதாரங்களை முகிலன் வெளியிட்டதால், அவரை காவல்துறையினர் கடத்தி வைத்து, ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இது ஸ்டெர்லைட் ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகிலன் காணாமல் போனது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த  2012-ம் ஆண்டு மார்ச் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தி ன்போதும் இதுபோல் முகிலன், சதீஷ் ஆகியோர் திடீரென மாயமானார்கள். பின்னர் 3 நாட்கள் கழித்து முகிலனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியது குறிப்பிடத்தக்கது.