சென்னை: பொன்முடியின் 3ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் சரணடைவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் தொடரும் என குறிப்பிட்டுள்ளது.

ஊழல் வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு  சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து பொன்முடிக்கு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள், பொன்முடிக்கு அளிக்க ப்பட்ட சிறை தண்டனைக்கு, இடைக்கால தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டு உள்ளனர். மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நான்கு வாரத்தில் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அடுத்து வந்த அதிமுக ஆட்சியில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் மாவட்ட நிதிமன்றம் விடுதலை செய்த நிலையில், வழக்கு முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி, உயர்நீதிமன்ற ‘நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தானேவே விசாரணைக்கு எடுத்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில்,  வழக்கை பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையும் எதிர்ப்பு தெரிவித்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை பின்னர் விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,  2023ம் ஆண்டு  டிசம்பர் 19ஆம் தேதி பரபரப்பு  தீர்ப்பு வழங்கினார். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.  இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார். அதில், தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் மற்றும் தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி சார்பில் சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற  நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு  ஜனவரி 12-ஆம் தேதி வந்தபோது, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி அபய்.எஸ்.ஓஹா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி ஆஜராகி, பொன்முடி ஏற்கனவே எம்எல்ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

இதைத்தொடர்ந்து, பொன்முடியின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்பு காவல்துறை 4 வாரத்தில் பதில் தெரிவிக்கும்படி உத்தரவிடதுடன், அதுவரை நீதிமன்றத்தில் சரணடைய விலக்கு நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தாக்கல் செய்த பின்பு உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைப்பது குறித்து பார்க்கலாம் என்றும் தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.