சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள் 7 பேர் கொண்ட அமர்வுக்கோ அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கோ மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதோடு, பெண்களை அனுமதிக்கலாம் என்கிற உத்தரவே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

2006ம் ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2017ம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. இதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், நுழைவதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது. அத்தோடு, பக்தியை பாலின பாகுபாட்டிற்கு உட்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. பக்தியில் சமத்துவத்தை ஒடுக்கும் ஆணாதிக்க கருத்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும், சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், மற்றும் அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா ஆகியோர் இந்து மல்ஹோத்ராவின் கருத்துக்கு நேர்மாறாக தீர்ப்புகளை அளித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பின் மூலம் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்று பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறை கேள்விக்குறியானது.

இதனை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மத்தியில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே, தேவசம்போர்டு தரப்பில் தலைமை நம்பூதி கண்டரரு ராஜீவரரு சார்பில் மறுபரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவோ மேலும் 64 மனுக்கள் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் ரோஹின்டன் பாலி நாரிமன் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம் கன்வில்கர் மற்றும் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோர் பெண்கள் செல்ல தடை விதிப்பதாகவும் தீர்ப்புகளை வழங்கினர். தீர்ப்பில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், இந்து மல்ஹோத்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், மறுபரிசீலனை மனுக்கள் நிழுவையில் இருப்பதால், பழைய நிலைப்படி பெண்களை அனுதிக்கும் தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.