குஜராத்: சிறைத் தண்டணை பெற்ற போலீஸ் அதிகாரிக்கு பணி வழங்கியது ஏன்? உச்சநீதிமன்றம் 

டில்லி:

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி 8 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற எஸ்.பி., என்.கே அமினை மீண்டும் பணியில் அமர்த்தியது ஏன்? என்று குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராகுல் சர்மா உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், தாபி எஸ்பி.யாக அமின், ரெயில்வே டிஎஸ்பி.யாக தரூர் பரோத் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் நியமனத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்து இறுதி முடிவு எடுக்க ஒரு நாள் அவகாசம் வழங்கி தலைமை நீதிபதி கேஹர், நீதிபதி சந்திரசவுத் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. ‘‘நாளைக்குள் இதில் முடிவு எடுக்கவில்லை என்றால் இந்த விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவர் மீது 2 பெரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அதில் ஒன்றில் சிறைத் தண்டனை பெற்று 8 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்’’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குஜராத் அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜராகினார். அவர் வாதிடுகையில், ‘‘அமின் 8 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதை விவரமாக கூற விரும்பவில்லை. ஆனால், மக்கள் பாதுகாப்புக்கு அவர் அரும் பணியாற்றியுள்ளார்’’ என்றார்.

முன்னதாக இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கிய முன்னாள் குஜராத் டிஜிபி பாண்டேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

சொராபுதீன் ஷேக் மற்றும் இஸ்ராத் ஜகான் ஆகியோரது போலி என்கவுன்டர் வழக்கு விசாரணையை அமின் எதிர்கொண்டு வருகிறார். சாதிக் ஜமான், இஸ்ராத் ஜகான் வழக்குகளில் தரூன் பாரோத் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Supreme Court questions Gujarat decision to reappoint N K Amin, குஜராத்: சிறைத் தண்டணை பெற்ற போலீஸ் அதிகாரிக்கு பணி வழங்கியது ஏன்? உச்சநீதிமன்றம்
-=-