டெல்லி:

மிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தடை கோரி திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

தமிழகத்தில் புதியதாக 5 மாவட்டங்கள் தொடங்கப்பட்ட நிலையில், அங்கு வார்டு வரையறை செய்யாமல், தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக தரப்பில் உச்சநீதி மன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று பரபரப்பாக நடைபெற்றது. திமுக தரப்பு வழக்கறிஞர், மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள் தங்களது கருத்துக்களை காரசாரமாக எடுத்து வைத்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  தேவைப்பட்டால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி போட முடியும் என்று கூறினர்.

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழகஅரசு வழக்கறிஞர், தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின்,எந்த நீதிமன்றத்தாலும் தேர்தலை தள்ளிபோட முடியாது  என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள்,  தேர்தலை ரத்து செய்யமுடியாது. ஆனால் முறையான விதிமுறைகள் பின்பற்ற முடியவில்லை எனில் அதை எங்களால் நிறுத்தி வைக்க முடியும் என்ற நீதிபதிகள்,  புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்தீர்களா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,  அதை செய்ய வேண்டியதில்லை என்றும், ஆணையம் தொகுதி மறுவரையறை பணிகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்துள்ளோம். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்ய முடியும் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமைநீதிபதி,  ஏற்கனவே உள்ள மாவட்டத்தின் வார்டுகள் புதிய மாவட்டங்களுக்கு எப்படிப் பொருந்தும் ? என கேள்வி எழுப்பியவர்,  ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து காரசார விவாதங்களைத் தொடர்ந்து, மறுவரையறை முடியாத 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? என்பது குறித்து 2 மணிக்குள் பதில் தெரிவித்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்தது.

அப்போது தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைய்யுங்கள் என்று கூறியது.

ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக வழக்கறிஞர், தடைவிதித்தால் மொத்தமாக தடைவிதியுங்கள் இல்லை என்றால் குழப்பம் ஏற்படும் என்று கடுமையாக வாதிட்டனர்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 9 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம் என்றும் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

அதையடுத்து தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.