டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்வழங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூலம் அந்த பகுதியில் நோய் பரவுவதாகவும், நிலத்தடி நீர் மாறுபட்டுள்ளதாகவும் கூறி, அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட 100 தொடர் போராட்டத்தையடுத்து, கடைசி நாளல் நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டு, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 40 பேருக்குப் பலத்த காயமும் 64 பேருக்குச் சிறிய காயங்களும் ஏற்பட்டன. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு ஸ்டெர்லைட் நிறுவனதுக்கு சீல் வைத்து, முற்றிலுமாக மூட உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா தரப்பில் பல முறை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு காரணமாக, ஆலையை திறக்க நீதிமன்றங்கள் அனுமதி வருகின்றன.
இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ததது. இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்து உள்ளது. மேலும், இந்த மாதம் 4-வது வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் கூறியுள்ளது.
ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 22, 23-ம் தேதிகளில் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 2-ம் தேதி தெரிவித்தது. இதனிடையே அரசியல் அமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து குறித்தான ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தொடங்கியதால் வேதாந்தா மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் சார்பில் நேற்று மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை ஏற்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு ஜனவரி 22-ம் தேதி வாக்கில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.