சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தினா் நடத்தும் ஊா்வலத்துக்கு நவம்பா் 19 அல்லது நவம்பா் 29-இல் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மாற்று மதத்தினை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், இந்த மாதம் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் அனுமதி வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு மற்ற மதங்களின் ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் இயக்க ஊர்வலத்துக்கு மட்டும் அனுமதி மறுத்து வருகிறது. எத்தனையோ தடை செய்யப்பட்ட அமைப்புகள் ஊர்வலங்களை நடத்தி வரும் நிலையில், இந்து அமைப்பான ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு பல்வேறு காரணங்களை கூறி தடை போட்டு வருகிறது.
கடந்த ஆண்டு விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அனுமதி கோரியது. ஆனால், இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதில், உச்ச நீதிமன்றமும் சில நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. இதன் பிறகு தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழகத்தில் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 33 இடங்களில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே விதித்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்தலாம் என்று கடந்த அக்டோபர் 16-ம் தேதி அனுமதி வழங்கியது. ஆனால், திமுக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரணி எங்கு தொடங்கி எங்கு முடியும் என்பது குறித்த தகவல்களை வரும் 9-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி,. நவம்பர் 19 அல்லது 26 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார் .
இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரிஷ் சுப்ரமணியன், கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.
அப்போது, ‘அக்டோபா் 22 மற்றும் 29-ஆம் தேதி இடையே பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால், அந்த ஊா்வலத்தை நடத்துவதிலும், பாதுகாப்பு அளிப்பதிலும் சிக்கல்கள் இருந்தன. மேலும், இதேபோன்று, வேறு சில கட்சிகளும் ஊா்வலம் நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில், அவற்றுக்கும் அனுமதி மறுக்கப்பட்டன. மேலும், இவா்கள் ஊா்வலம் நடத்த முன்மொழிந்திருந்த வழித்தடங்களில் பல மசூதிகளும், தேவாலயங்களும் இருந்தன. இதனால், மோதல் சூழலுக்கும், சட்டம் – ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. மோதல் நிகழ நாங்கள் விரும்பவில்லை.
வேறு ஏதும் தேதியை அவா்கள் பரிந்துரைத்தால் அதற்கு நாங்கள் அனுமதிக்க விரும்புகிறோம். மேலும், அவா்கள் கோரியதுபோல ஒரு மாவட்டத்திற்கு 3 ஊா்வலங்களை அனுமதிப்பதற்கு பதிலாக ஒரு மாவட்டத்தில் ஒரு ஊா்வலம் நடத்த மட்டுமே மாநில அரசால் அனுமதி அளிக்க முடியும். தினந்தோறும் ஊா்வலம் நடத்த அவா்களை அனுமதிக்க முடியாது’ என்றனா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘அவா்கள் தற்போது இரு தினங்களுக்கு மட்டுமே ஊா்வலம் நடத்த அனுமதி கோருகின்றனா். தினம்தோறும் அல்ல’ என்பதை சுட்டிக்காட்டியதுடன், அனுமதி வழங்க உத்தரவிட்டது.