டெல்லி: தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள்’ நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழகஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற  தமிழக அரசின் புதிய சட்டத்தின்படி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.