நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர், வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாகப் புகார் கூறினார்.

தற்போது அவர், “நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுகிறது.  அதனால் எல்லா நீதிபதிகளையும் அழைத்து விவாதிக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகாவில் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி கிருஷ்ணா பட் என்பவர் மீது, பெண் நீதிபதி ஒருவர் புகார் தெரிவித்திருந்த நிலையில், விசாரணையில் அவர் நிரபராதி என தெரியவந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாத கிருஷ்ணா பட் மீது மீண்டும் விசாரணை நடத்த மத்திய சட்ட அமைச்சகம், கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரிக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

இதனை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள செல்லமேஸ்வர், அரசு நிர்வாகத்தின் இந்தச் செயல் அதிர்ச்சி அளிக்கிறது என்றும், இதற்கு முன் இதுபோல் நடந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேநிலை நீடித்தால் நிலுவையில் உள்ள வழக்குகளில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு, உத்தரவிடக்கோரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றும், அதனால் நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு குறித்து அனைத்து நீதிபதிகளையும் அழைத்து விவாதிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் செல்லமேஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.