ராஞ்சி:

உடல் நலக்குறைவால் அவதிப்படும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மேல் சிகிச்சைக்காக டில்லிக்கு விமானத்தில் செல்வதற்கான கட்டணம் அளிக்க ஜார்க்கண்ட் மாநில அரசு மறுத்து விட்டது.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 17 ம் தேதி அவர், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லாலுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக டில்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து அவரை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

டில்லி செல்வதற்கான விமான பயண கட்டத்தை அளிக்கும்படி லாலு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஜார்க்கண்ட் மாநில அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து லாலு,  ராஞ்சியிலிருந்து ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 மணி நேர பயணத்திற்கு பின் டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கு ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் சரயு ராய் அதிருப்தி தெரிவித்துள்ளார். இவர், “விமான பயணத்திற்கான கட்டணத்தை செலுத்த மறுத்தது தவறு” என்று கூறியுள்ளார். இவர்தான் லாலுவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆர்ஜேடி, பா.ஜ., ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டுள்ளோம். 1990 ம் ஆண்டில் பா.ஜ., தலைவர் அத்வானி கைது செய்யப்பட்ட போது, அவரை தும்கா நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல அப்போதைய முதல்வர் லாலு உத்தரவிட்டதை நினைவு கூர்ந்தார்.