சென்னை: உ.பி. மாநிலம் ஹத்ராஜ் தலித் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை பலனளிக்காது; உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெற்றோர் சம்மதிக்காத நிலையிலும், அவர்களை ஓர் அறையில் பூட்டிவிட்டு, பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்துள்ளனர். இதனை, இந்தியா டுடே நிருபர் தனுஸ்ரீ வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ வெளியானபிறகுதான், தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட விவரமே வெளி உலகுக்குத் தெரியவந்தது.
இந்நிலையில், பெண்ணின் சகோதரர் சந்தீப் மற்றும் பெண்ணின் தந்தையுடன் தனுஸ்ரீ நிகழ்த்திய தொலைபேசி உரையாடல், அரசின் இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் வெளியானது. அந்த உரையாடலில், வலுக்கட்டாயப்படுத்தி உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, காவல் துறை விசாரணை திருப்தி அளிப்பதாக எழுதி வாங்கப்பட்டதாக, உங்கள் தந்தை கூறுவது போல வீடியோ எடுத்து எனக்கு அனுப்புங்கள் என, அந்த உரையாடலில் நிருபர் தனுஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணின் தந்தை பேசிய பேச்சையும், பிரியங்கா காந்தி பகிர்ந்துள்ளார். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாகவும், எங்களைச் சந்திப்பதற்கு ஊடகங்களை அனுமதிக்கவில்லை என்றும் பெண்ணின் தந்தை அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இந்த, வீடியோவை வைரலாக்கி வரும் பாஜகவினர், தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூறி வருகின்றனர். ஊடகங்கள் உண்மையைத் திரித்துக் கூறுவதால் தான், அவர்களை ஹர்தாஸ் கிராமத்துக்குள் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்தியா டுடே நிருபரின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்து கசிய விட்டதோடு, அதனை அரசு சார்ந்த இணையதளத்திலும் வெளியிட்டதற்கு ‘இந்தியா டுடே’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு ஊடகங்களை உத்தரப் பிரதேச அரசு அனுமதிக்கவில்லை. ஹத்ராஸ் பாலியல் படுகொலை தொடர்பாக செய்திகளைச் சேகரித்து வரும் எங்கள் நிருபர் தனுஸ்ரீயின் தொலைபேசி உரையாடலை ஏன் பதிவு செய்தீர்கள் என்று முதலில் கேள்வி எழுப்புகிறோம்.
சந்தீப் தொலைபேசியைப் பதிவு செய்திருந்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தைக் கண்காணிப்பது அல்லது தொலைபேசியைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும்.
எந்த சட்ட விதிகளின் அடிப்படையில் தொலைபேசிகள் குரல் பதிவு செய்யப்பட்டன?. எந்த சட்ட விதிகளின்படி, இந்த தொலைபேசி குரல் பதிவுகளைப் பெற்று, அதனை அதிகாரிகள் கசியவிட்டனர்? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு மக்கள் உரிமைகளுகான பி.யூ.சி.எல். அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பது குறித்து மிகத் தெளிவான விளக்கத்தைக் கூறியிருந்தது. இந்திய டெலிகிராம் சட்டத்தில் பிரிவு5(2)இன்கீழ் பொது நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதற்கு சில விதிமுறைகள் வகுத்திருக்கிறது.
அதன்படி தொலைபேசி ஒட்டுக்கேட்பதற்கு மத்திய உள்துறைச் செயலாளர் அல்லது மாநில உள்துறைச் செயலாளர் எழுத்துபூர்வமான அனுமதியின் அடிப்படை யிலேயே செய்ய முடியும். அதைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் 2017 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குடிமக்களுக்கு இருக்கிற தனிப்பட்ட உரிமை என்பது அடிப்படை உரிமையாகக் கருதப்பட்டு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19 மற்றும் 21 இல் கூறப்பட்டுள்ளவற்றை மீறுவதாக இருக்கக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை முழுமையாக உதாசீனப்படுத்துகிற வகையில் உத்தரப் பிரதேச பாஜக அரசு செயல்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட மாஜிஸ்திரேட்டுமான பிரவீன் குமார், பெண்ணின் தந்தையை மிரட்டி, மென்மையாக நடந்து கொள்ளுமாறு கூறும் வீடியோவும் வெளியாகியுள்ளது. ஊடகங்கள் வரும், போகும். நாங்கள் தான் உங்களுடன் எப்போதும். இருப்போம். கவுரவத்தை விட்டுவிடாதீர்கள் என்றும் பிரவீன் குமார் அதில் கூறியுள்ளார். இதைத்தான் ஆதித்யநாத் தலைமையிலான அரசு தம்மை நிர்பந்திப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, எதுவுமே நடக்கவில்லை என்று கூறிய உத்தரப் பிரதேச அரசு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் மற்றும் 4 காவல் துறையினரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட தலித் பெண்ணின் உடலை உறவினரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினர் பலவந்தமாக சுடுகாட்டில் எரித்ததை தொலைக்காட்சியில் படம் பிடித்ததன் மூலம் உலகிற்கு உண்மை உணர்த்திய இந்தியா டுடே செய்தியாளர் தனுஸ்ரீ பாண்டே கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். உத்தரப் பிரதேச அரசின் செயலை இந்திய பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது.
எனவே, உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ள மத்திய புலனாய்வுத்துறை விசாரணையினால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து பாலியல் வன்கொடுமைக்குப் பலியான தலித் பெண்ணின் வழக்கை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் பாஜக அரசின் அதிகார வர்க்கம் உண்மைகளை குழிதோண்டி புதைத்துவிடும் என்பதை எச்சரிக்கையாக கூற விரும்புகிறேன்”.
இவ்வாறு கூறியுள்ளார்.