டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்தியஅரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது என்றும் கூறியுள்ளது.
பல்வேறு மசோதாக்களுக்கு காலதாமதம் செய்த ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலின் உதவியை நாடுவதாக தெரிவித்து உள்ளது. மேலும், தமிழக அரசு தனது மனுவில் எழுப்பியுள்ள பிரச்சனைகள் மிகுந்த கவலை அளிப்பதாக எஸ்சி கூறுகிறது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு மாநில சட்டமன்றம் அவரது ஒப்புதலுக்காக அனுப்பிய மாநில அரசின் கோப்புகள், உத்தரவுகள் மற்றும் கொள்கைகளை ஆளுநர் பரிசீலிக்காதது அரசியலமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, இரண்டு ரிட் மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, முகுல் ரோஹத்கி, பி.வில்சன் ஆஜராகினர். அப்போது, சட்டப்பேரவையில் 2020ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மசோதாக்கல் கிடப்பில் இருக்கிறது. பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார். கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளை கூட ஆளுநர் கிடப்பில் போட்டு வைக்கிறார். மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன” என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் படி மசோதாக்கள் மீது ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வில்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். மசோதாக்களை கிடப்பில் போடக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.