சென்னை: 32ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி  உள்பட 7பேர்  குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு,  கடந்த 30 ஆண்டு களாக சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய மத்தியஅரசு மறுத்து வருகிறது. இதற்கிடையில், பேரறிவாளன் உடல்நிலை கருத்தில் கொண்டு அவர் சிகிச்சை பெறும் வகையில், தமிழக அரசுக்கு அவருக்கு பரோல் வழங்கி உள்ளது. தொடர்ந்து 9வது மாதமாக பேரறிவாளன் பரோலில் இருந்து வருகிறார்.

இதையடுத்து, அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.  பேரறிவாளன் கல்வித் தகுதி, உடல்நலக்குறைவு மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள்  எல்.நாகேஸ்வரராவ் மற்றும் நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது,  பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிறை விதிகளுக்குள்பட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்  பரோல் வழங்கலாமே தவிர ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதுபோல பேரறிவாளன் உள்பட  7 பேர் மீதான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முடிவு எடுக்க முடியும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  ஏற்கனவே 30 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் மேலும் தாமதம் செய்வது எப்படி? என்றுகேள்வி எழுப்பினர்.  ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளை  விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம் என்பது பற்றி பிறகு விசாரிக்கிறோம் இப்போது ஜாமீன் பற்றி விசாரிக்கலாம் என்று கூறி அதுகுறித்து வாதாட அறிவுறுத்தனர்.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்றது.  மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, அவர் ஜாமீனில் வெளிவரத் தகுதியுடையவர் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறி ஜாமின் வழங்குவதாக இடைக்கால உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9மாதமாக பரோலில் உள்ள பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!