டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்ற ஒன்றரை மாதத்தில் 6,844 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 9ம் தேதி பதவியேற்றார். அதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், நீதிபதிகள் மற்றும் அரசியல் சாசன அமர்வுகளிலும் மாற்றம் செய்து வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பதவி ஏற்றபோது,  ஜாமீன் மற்றும் வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும், தனிப்பட்ட சுதந்திரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.  எனவே ஜாமீன் மனுக்கள் மீது முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், நவம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் 6,844 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், புதிதாக 5,898 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,511 வழக்குகள் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரும் மற்றும் ஜாமீன் மனுக்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் ஏற்கனவே, அயோத்தி நில சர்ச்சை தொடர்பான வழக்கில்,  கடந்த 2019-ஆம் ஆண்டு நவ. 9-ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மேலும்,  ராமா் கோயில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை அளித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வில் சந்திரசூட் இடம்பெற்றிருந்தாா்.

அதுபோல,  சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை அமா்வில் இடம்பெற்றிருந்த சந்திரசூட் உள்பட 4 நீதிபதிகள் வழங்கினா். முன்னாள் நீதிபதி ஹிந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீா்ப்பை வழங்கினாா். அந்த குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

மெலும், ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும் என்று சந்திரசூட் தலைமையிலான அமா்வு தீா்ப்பளித்தது.

அரசமைப்புச் சட்டப்படி ஆதாா் எண் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வில் இடம்பெற்றிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் தீா்ப்பளித்தனா். எனினும் அந்த அமா்வில் இடம்பெற்ற சந்திரசூட், அரசமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆதாா் என்று தீா்ப்பளித்தாா்.