குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், தன் மொபைல் போனில் சிறுவர்களின் ஆபாச படங்களை பார்த்ததாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் அந்த இளைஞர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அந்த இளைஞரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிறுவர்கள் இருவர், பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் 2 வீடியோ படங்கள் மனுதாரர் செல்போனில் பார்த்துள்ளார். அந்த வீடியோ அவரது செல்போனில் உள்ளதை தடய அறிவியல் துறையும் உறுதி செய்துள்ளது. இதற்காக அவர் மீது போக்சோ வழக்குப் போடப்பட்டுள்ளது. அவரிடம் விசாரித்தபோது, ஆபாச படங்கள் பார்த்ததை ஒப்புக் கொண்டார்.

ஆபாச படங்களை பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், அதில் இருந்து விடுபட உளவியல் சிகிச்சைக்கு செல்ல விரும்புவதாகவும் கூறினார். பொதுவாக மொபைல் போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை. அவர் குழந்தைகளை ஆபாச படம் எடுக்க பயன்படுத்தவில்லை. அதனால், போக்சோ சட்டப்பிரிவு 14 (1)-ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்ட முடியாது.

மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 67-பி-யின்படி, ஆபாச படங்களை எடுத்து, அதை வெளியிட்டால் அல்லது பரப்பினால்தான் குற்றமாகும். ஆனால், மனுதாரர் இதுபோல எந்த குற்றமும் செய்யவில்லை. இணையதளத்தில் இருந்து ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததால் அவர் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா உயர் நீதிமன்றம், ஆபாச வீடியோக்கள், படங்கள் பார்ப்பது தவறு இல்லை என்று கடந்த ஜனவரி மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளித்தார்.

இதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்க்க இளைஞர்கள் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.